நெதர்லாந்து புதிய பிரதமராக ரொப் ஜெட்டன் பதவியேற்பு.!
நெதர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக ரொப் ஜெட்டன் நேற்று (23) பதவியேற்றுக்கொண்டார். சிறுபான்மை நாடாளுமன்ற ஆதரவுடன் அமைந்த அரசின் தலைவராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.நெதர்லாந்து வரலாற்றில் மிக இளைய வயதான பிரதமர்களில் ஒருவராக கருதப்படும் ரொப் ஜெட்டன், அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 66 ஜனநாயகவாதிகள் கட்சி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார்.
அந்தத் தேர்தலில் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கைகளுக்குப் பெயர் பெற்ற கீர்ட் வில்டர்ஸ் தலைமையிலான கட்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.பதவியேற்பு நிகழ்வு ஹேக் நகரில் உள்ள ஹுயூஸ் டென் பொஸ்க் மாளிகையில் நடைபெற்றது. மன்னர் வில்லியம் அலெக்ஸாண்டர் அவர்களால் ரொப் ஜெட்டன் சத்தியப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.
பதவியேற்ற பின்னர் தனது சமூக வலைத்தளப் பதிவில், அனைவரும் இணைந்து செயற்படுவதில் பெருமை கொள்வதாகவும், நெதர்லாந்து மக்களுக்காக புதிய பொறுப்புடன் செயல்பட்டு புதிய சகாப்தத்தை உருவாக்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.