நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு..!
நெதர்லாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் வீபே டி போர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்று (21) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, மீள்குடியேற்ற நிலைமைகள், இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் மற்றும் மீளக்குடியமரவுள்ள குடும்பங்களின் வாழ்வாதார நிலைப்பாடுகள் குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்தார்.
மேலும், விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் அவற்றின் நவீனமயமாக்கல், மாவட்டத்தின் தற்போதைய சமூக–பொருளாதார நிலவரம், தீவக அபிவிருத்தி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண கோட்டை தொடர்பாக கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அது தற்போது முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக உள்ளதாக தெரிவித்தார். தொல்லியல் திணைக்களம் மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து யாழ்ப்பாண கோட்டையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையையும் அவர் எடுத்துரைத்தார்.
இதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்தி பரிசீலிப்பதாக தெரிவித்தார். அத்துடன், தீவகப் பகுதி சுற்றுலா அபிவிருத்தி, குறிப்பாக நெடுந்தீவு சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்க அதிபர் விளக்கமளித்தார்.இந்த சந்திப்பின் போது, நெதர்லாந்து தொடர்பான ஆவணப் புத்தகம் ஒன்றை உயர்ஸ்தானிகர் அரசாங்க அதிபரிடம் கையளித்தார்.
இச் சந்திப்பில் நெதர்லாந்து உயர்ஸ்தானியகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நாமல் பெரேரா மற்றும் கலாசார ஆலோசகர் கிறைசனி மெண்டிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
