சிங்கள–பௌத்த வாக்குகளால் வென்ற ஜனாதிபதி அவர்களது நலன்களை பாதிக்கக் கூடாது – சரத் வீரசேகர.!
சிங்கள–பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி பதவிக்கு வந்துவிட்டு, வடக்கிற்குச் சென்று அவர்களைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செயற்படக் கூடாது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் அநுரகுமார திஸாநாயக்க தோல்வியடைந்ததாகவும், நாடு முழுவதும் அவருக்கு கிடைத்த வாக்குகள் 42 சதவீதம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.
அந்த வாக்குகளில் பெரும்பாலானவை சிங்கள–பௌத்த மக்களிடமிருந்து கிடைத்தவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதனால், சிங்கள–பௌத்த வாக்குகளின் அடிப்படையில் பதவிக்கு வந்த ஜனாதிபதி, வடக்கிற்குச் சென்று சிங்கள–பௌத்த மக்களின் நலன்களுக்கு எதிரான வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என சரத் வீரசேகர வலியுறுத்தினார்.
மேலும், திஸ்ஸ விகாரை என்பது புராதன விகாரை என ஏற்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய காணி உரிமையும் சட்டரீதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதி மேற்கொள்ளும் அறிவிப்புகள், சிறீதரன், கஜேந்திரகுமார் போன்ற தரப்புகளுக்கு மேலும் உந்து சக்தியாக அமையக்கூடும் எனவும் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்தார்