பங்களாதேஷ் அணிக்கு இந்தியாவில் குறிப்பிட்ட அச்சறுத்தல்கள் இல்லை..!
எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் ஆடுவதற்கு குறிப்பிட்ட அல்லது அதிகரித்த அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு மதிப்பீடு ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில (ஐ.சி.சி.), பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ளது.இந்த மதிப்பீடு உள்ளக அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு அது பங்களாதேஷ் சபையின் பாதுகாப்பு குழுவிடம் பகிரப்பட்டுள்ளது.
இதில் பங்களாதேஷ் அணிக்கு முழுமையான அச்சுறுத்தல் நிலை இல்லை என்றும் சில இடங்களில் மிகக் குறைவானது தொடக்கம் நடுநலையான அச்சுறுத்துல் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை போட்டிகளை மாற்றுவதற்கு போதுமான நிலையாக இல்லை என்று ஐ.சி.சி. வகைப்படுத்தியுள்ளது.
இந்த பாதுகாப்பு மதிப்பீடு தொடர்பான விபரத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐ.சி.சி. கடந்த வாரம் பகிர்ந்துகொண்டுள்ளது. இது பற்றிய விபரத்தை பங்களாதேஷ் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்தார்.
‘நாங்கள் இரண்டு கடிதங்களை (ஐ.சி.சிக்கு) அனுப்பியுள்ளோம், அதன் பின் ஐ.சி.சி. பாதுகாப்பு குழு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது’ என்று நாட்டின் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பாக இருக்கும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பில் மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக நஸ்ருல் கூறினார். இதில் அணியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் இருப்பது, பங்களாதேஷ் ரசிகர்கள் இந்தியாவில் அணியின் டீசேர்ட்டை அணிந்திருப்பது மற்றும் பங்களாதேஷில் நடைபெறவுள்ள தேர்தல் ஆகியவையே அவையாகும்.
எனவே, ஐ.சி.சி. பாதுகாப்பு குழுவின் இந்த அறிக்கை, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான சூழ்நிலை இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
எமது அணி எமது சிறந்த பந்து வீச்சாளர் இன்றி ஆடுவது, எமது ரசிகர்கள் பங்களாதேஷ் ஜெர்சியை அணியாது இருப்பது மற்றும் கிரிக்கெட் ஆடுவதற்காக பங்களாதேஷ் தேர்தலை நாம் ஒத்திவைப்பதை ஐ.சி.சி. எதிர்பார்ப்பதாயின், அது வினோதமான, எதார்த்தத்திற்கு புறம்பான மற்றும் நியாயமற்ற எதிர்பார்ப்பாக இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஐ.சி.சி. நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரியவருகிறது. அதன்படி போட்டி அட்டவணை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் அதனை பின்பற்றுவதற்கு ஐ.சி.சி. எதிர்பார்த்துள்ளது.
இது தொடர்பில் நஸ்ருலின் கூற்று தவறான அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தரப்பு தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு மதிப்பீட்டில் அணித் தேர்வு குறித்தோ, ரசிகர்கள் அணியும் ஆடை குறித்தோ அல்லது உள்நாட்டு தேர்தலை ஒத்திவைப்பது குறித்தோ எந்த பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி இலங்கை மற்றும் பங்களாதேஷில் ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி தனது முதல் மூன்று குழுநிலைப் போட்டிகளையும் கொல்கத்தாவிலும் இறுதிக் குழுநிலைப் போட்டியை மும்பையிலும் ஆடவுள்ளது.
எனினும் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலுக்கு இரு முறை கடிதம் அனுப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் முறுகல் மற்றும் பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை இந்திய பிரீமியர் லீக்கில் இருந்து நீக்கியதை அடுத்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.