லங்கா பிரீமியர் லீக்கின் வீரர் தேர்வு மார்ச் 22 இல் ஆரம்பம்..!
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கு வீரர்கள் ஏலத்திற்கு பதில் வீரர்கள் தேர்வு மாத்திரம் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.எதிர்வரும் ஆறாவது லங்கா பிரீமியர் லீக் டி20 தொடருக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த வீரர்கள் தேர்வின்போது தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர்; எதிர்வரும் ஜூலை 8 தொடக்கம் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.கடந்த 2025 டிசம்பரில் நடைபெறவிருந்த தொடரே எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எதிர்வரும் பெப்ரவரியில் ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகும் வகையிலேயே இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து அணிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆறாவது அணி ஒன்றை இணைப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. முந்தைய ஐந்து தொடர்களிலும் கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ளை மற்றும் ஜப்னா ஆகிய ஐந்து அணிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து இயங்கி வரும் அணியான ஜப்னா கிங்ஸ் மற்றும் இரண்டாவது தொடரில் வைத்து இணைக்கப்பட்ட கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வைத்து நீக்கப்பட்டன. ஒப்பந்தக் கடப்பாடுகள் கடைப்பிடிக்க தவறியதாகக் கூறியே அந்த அணிகள் நீக்கப்பட்டன.