வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்திய இளைஞன் கைது.!
வல்வெட்டித்துறையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம்பிடித்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையுடன், அவர் பயன்படுத்திய ட்ரோன் மற்றும் திறன்பேசி ஆகியவையும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேதகு பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறை, ஆலடி வீதியில் உள்ள அவர் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது அனுமதியற்ற முறையில் ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம் பிடித்தமைக்காக வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிகழ்விடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அவரது உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் உரிய அனுமதி மற்றும் பதிவு இன்றி கமரா பொருத்தப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


