பெண்கள் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள்.!
பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் பல்வேறு விசேட நிகழ்ச்சிகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. இதற்கு இணையாக, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றப் பணியாளர்களும் செம்மஞ்சள் அல்லது செம்மஞ்சள் கலந்த ஆடைகளை அணிந்து இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு இணையாக, நாடாளுமன்றத்துக்குள் 16 நாட்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இம்முறை உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தின் தொனிப்பொருளாக “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணைவோம்: நீதியை நிலைநாட்டுவோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்பது அமைந்துள்ளது. இலங்கையில் இம்முறை இச்செயற்பாட்டு இயக்கம் “இது எனது உரிமை” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் விடுத்தார். இதன்போது, நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன் இணைந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தின் ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் சபைக்கு அறிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத் தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் கூட்டுப் பங்களிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
16 நாட்கள் செயற்பாட்டு இயக்கமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று ஆரம்பமாகி, டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று நிறைவடையும் உலகளாவிய இயக்கமாகும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பிலும் சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டுதல், இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் வன்முறைகளற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ஊக்குவித்தல் ஆகியன இந்தச் செயற்பாட்டு இயக்கத்தின் நோக்கங்களாகும்.
அதற்கமைய, பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்குச் சட்ட மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதையும் இம்முறை செயற்பாட்டு இயக்கம் வலியுறுத்துகின்றது.
















