பருத்தித்துறையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!
சிறுவர்களின் கலை ஆற்றுகை நிகழ்வுகளுடன் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு பருத்தித்துறை, சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
முன்னதாக, சுப்பர்மடம் முனியப்பர் ஆலயத்தில் பொது திருவுருவப்படம் வைக்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுப்பர்மடம் கிராமத்தைச் சேர்ந்த மாவீரர் அறிவின் தந்தை வேலுமயிலும் பொது திருவுருவப்படத்தைத் தாங்கியவாறு வர, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் சுப்பர்மடம் சித்திவிநாயகர் முன்பள்ளி மாணவர்களின் இசை அணிவகுப்பு மரியாதையுடன் ஊர்வலமாக நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்விடத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரால் நினைவுச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.
நிகழ்வின் சிறப்பம்சமாகச் சிறுவர்களின் கலை ஆற்றுகை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் எவ்விதக் குறிப்புமின்றி ஆற்றிய உரையும், சிறுமிகளின் நடன நிகழ்வும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு வேட்டி, சேலை என்பவற்றுடன் அந்தந்த மாவீரர்களின் திருவுருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுப்பர்மடம் பகுதி மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










