துப்பாக்கி திருட்டு; நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, தனது கடமைக்காக வழங்கப்பட்ட T-56 ரக துப்பாக்கியைத் திருடி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டு, இன்று வியாழக்கிழமை (26) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், பெமடுவ, ஹெலம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஜயக்கொடி ஆராச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயக்கொடி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டுத் தப்பிச் சென்று டுபாயில் தலைமறைவாகியிருந்த இவரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து டுபாயில் கைது செய்தனர்.
இன்றைய தினம் அதிகாலை 5.20 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 226 விமானம் மூலம் இவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
விமான நிலையத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்த சி.ஐ.டி அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக அவரை மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


