லால் காந்த, மஹிந்த ஜயசிங்கவை விளாசிய முன்னிலை சோசலிசக் கட்சி.!
தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட லால் காந்தவும் மஹிந்த ஜயசிங்கவும் இன்று தொழிலாளர் வர்க்கத்தின் குரலைப் புறக்கணித்து, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர்களாக மாறியுள்ளனர் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட குற்றம் சாட்டினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பாரம்பரியத்தின்படி, ஒரு சக்தியுடன் இணைந்து செயற்பட்டுவிட்டு பின்னர் எதிரியின் பக்கம் சென்றவர்கள் துரோகிகளாகவே அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தொழிற்சங்கங்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. அவற்றினூடாக வெளிப்படுவது உழைக்கும் மக்களின் குரலாகும் என்பதை இதுவரை வலதுசாரி அரசியல்வாதிகள்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய தேசிய ஊழியர் சங்கத்தின் சிறிநால் டி மெல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலவி மௌலானா உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர் போராட்டங்களை இவ்வாறு சிறுமைப்படுத்தியதில்லை.
ஆனால், லால் காந்தவும் மஹிந்த ஜயசிங்கவும் தொழிற்சங்கப் போராட்டங்கள் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நாடகங்கள் என்றும், அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் கூறுகின்றனர். தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்த அவர்கள் நாடாளுமன்றத்துக்குச் சென்ற பின்னர் தங்களுடைய வரலாற்றையே மறந்துவிட்டனர்.
தொழிற்சங்கப் பின்னணியே அவர்களுக்கு நாடாளுமன்றப் பதவிகளையும் அமைச்சர், பிரதி அமைச்சர் பொறுப்புகளையும் பெற்றுக்கொடுத்தது.
இன்று அவர்கள் தொழிலாளர் இயக்கத்துக்கே துரோகம் இழைத்துள்ளனர். மீண்டும் எதிர்க்கட்சிக்குச் செல்லும் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தினூடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பையும் அவர்கள் இழப்பார்கள். அவர்களைப் பற்றிய தீர்மானத்தை உழைக்கும் மக்களே எடுப்பார்கள். அவர்களின் கருத்துகளால் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.
2022ஆம் ஆண்டில் இதைவிடப் பெரிய அடாவடித்தனங்களையும் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அடிபணியமாட்டோம் என்பவர்களை அடிபணியச் செய்து காட்டுவதே தொழிலாளர் இயக்கத்தின் தற்போதைய சவாலாகும்.
அரசின் புள்ளிவிபரங்களின்படி, 2021 ஜனவரி முதலாம் திகதி ஒரு இலட்சம் ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ளக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளை, 2025 டிசம்பர் 31ஆம் திகதி பெற்றுக்கொள்ள இரண்டு இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. ஆனால், மக்களின் சம்பளம் இருமடங்காக அதிகரிக்கவில்லை. 2026ஆம் ஆண்டில் பணவீக்கம் 6,7 சதவீதமாக அதிகரித்து 8 சதவீதத்தை எட்டியதுடன், தற்போது 9 சதவீதமாக உயருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 280 நிறுவனங்களின் இலாபம் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. அதிக இலாபம் ஈட்டிய ஐந்து நிறுவனங்களில் மூன்று நிதி நிறுவனங்களாகும். வங்கிகள் பாரிய இலாபம் ஈட்டும் நிலையில், மக்கள் வாகனங்கள், இயந்திரங்கள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்துகளை இழந்து வீதிக்கு வருகின்றனர்.
எனவே, இந்த இலாபத்தில் ஒரு பகுதியையாவது மக்களின் உணவுத் தேவைக்காக வழங்க வேண்டும். பசியால் வாடி உணவு கேட்பவர்களிடம், பசியைப் பற்றிச் சிந்திக்காமல் நாட்டைப் பற்றிச் சிந்திக்குமாறு கூற முடியாது. பசியுடன் இருப்பவர்கள் தங்களுடைய பசியைப் பற்றித்தான் சிந்திப்பார்கள்.” – என்றார்.


