வனிதா விஜயகுமாரின் உருக்கமான பதிவுகள்!
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா, தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் பிரிவுகளையும் எதிர்கொண்டார்.
இதனையடுத்து, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாவது பருவத்தில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த ஆண்டு எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்துப் பதிவிட்டுள்ள வனிதா, இந்த ஆண்டு மயக்க மருந்தின்றி திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டதைப் போன்ற வலியைத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல எதிர்பாராத மாற்றங்களையும் முடிவுகளையும் சந்தித்ததாகவும், பலரைச் சந்தித்ததுடன் சிலரை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்காவிட்டாலும், தன்னைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டதாகவும், சில ஆண்டுகள் நம்மைப் புரிந்துகொள்வதற்காக அல்ல, நம்மை மாற்றுவதற்காகவே வருகின்றன என்றும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், கடவுள் தனது வாழ்க்கைக் கதையை ஏன் இவ்வாறு எழுதியுள்ளார் என்பது முழுமையாகப் புரியவில்லை என்றாலும், “என்னை நம்பு குழந்தாய், நீ நிச்சயம் இதில் வெற்றி பெறுவாய்” என்று கண்ணீருடன் கூறிக்கொண்டே அவர் எழுதியிருப்பார் எனத் தாம் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வனிதாவின் இந்தப் பதிவுகளுக்கான பின்னணி என்ன என்பது குறித்து அவர் எந்தவிதமான விளக்கத்தையும் வெளியிடவில்லை. இதனால், அவருக்கு என்ன நேர்ந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதுடன், தைரியமாக இருக்குமாறும் அனைத்தும் சரியாகிவிடும் என்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


