உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
120 பார்வைகள்

இலங்கையில் இலவச சுகாதாரச் சேவையைப் பாதுகாக்கவும், வைத்தியர்களை நாட்டில் தக்கவைக்கவும் தமது ஐந்து பிரதான கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் அரசு உரிய தீர்வை வழங்காவிட்டால், அடுத்த வாரத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான வைத்தியர் லசித்த தம்மிக எச்சரித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வைத்தியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையால் அரசுக்குச் சுமார் 44 பில்லியன் ரூபாய் சேமித்துக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், பொருளாதாரம் சீரடைந்த நிலையிலும் தமக்குரிய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கையின் மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவை இன்று மிக முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத் துறை முகங்கொடுத்து வரும் பல பாரதூரமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

கடந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோய்ச் சூழல்களில் அரசுகளால் தீர்வு வழங்க முடியாத நிலையைப் புரிந்துகொண்டு, நாட்டின் பிரச்சினைகள் தீரும் வரை வைத்தியர்கள் பொறுமையுடன் காத்திருந்தனர்.

எனினும், தற்போது வைத்தியர்களுக்கும் சுகாதாரத் துறைக்கும் உரிய பிரச்சினைகள் மிகவும் மோசமடைந்து, மருத்துவச் சேவையை உகந்த நிலையில் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு இந்தப் பிரச்சினைகளை எடுத்துரைக்க முயன்ற போதிலும், அரசாங்கம் உணர்ச்சியற்ற வகையில் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பைக் கூட வழங்காமல் உள்ளது.

இதனால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விழிப்புணர்வு வாரமொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் மகா சங்கத்தினரைச் சந்தித்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தல் போன்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. நோயாளர்களுக்கோ பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பேச்சுகள் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவே இந்த வாரம் முயற்சிக்கின்றோம்.

ஆனால், இந்த மாதம் 30ஆம் திகதிக்குள்ளும் அரசு உணர்வுபூர்வமாகத் தலையிட்டுத் தீர்வு வழங்காவிட்டால், அவசர மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய வேலைநிறுத்தம் உள்ளிட்ட கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எந்தவொரு வேலைநிறுத்தமும் இன்றி கடந்த 10ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு முன்னால் நாடு முழுவதிலுமிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் திரண்டனர். நாட்டில் சுமார் 25 ஆயிரம் வைத்தியர்கள் உள்ள நிலையில், அனைத்துச் சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுத்தவாறே 3 ஆயிரம் வைத்தியர்கள் போராட்டத்தில் பங்கேற்றமையிலிருந்து, வைத்தியர்களிடையே நிலவும் அதிருப்தியையும் அழுத்தத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலதிக கடமை மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டதால், ஆரம்ப நிலை வைத்தியருக்கு மாதத்துக்கு 29 ஆயிரத்து 948 ரூபாவும், இரண்டாம் நிலை வைத்தியருக்கு 6 ஆயிரத்து 329 ரூபாவும், மூன்றாம் நிலை வைத்தியருக்கு 83 ஆயிரத்து 804 ரூபாவும் மாதாந்தப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. நிபுணத்துவ வைத்தியருக்குச் சம்பளத்தில் 1,440 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக வைத்தியர்கள் செய்த தியாகத்தின் மூலம் அரசுக்குச் சுமார் 44 பில்லியன் ரூபாய் சேமித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதாரம் சீரடைந்துள்ளதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த அரசு, வைத்தியர்களுக்குரிய நியாயமான உரிமைகளை வழங்குவதற்குப் பின்வாங்கக் கூடாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0