மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு.!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த சந்தேகநபரை நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மதுபான விற்பனை நிலையத்தின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மூன்று மதுபானப் போத்தல்களை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
பின்னர், நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் பயணித்த வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளார்.
அவரை கைது செய்த பொலிஸார், இன்று (23) திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான உத்தரவைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.



