உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு மாகாணத்தில் 132 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையவில்லை.!

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
108 பார்வைகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தின் 281 மாகாணப் பாடசாலைகளில், 132 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சிய பணிகளை நிறைவு செய்ய 53.29 மில்லியன் ரூபாய் மேலதிகமாகத் தேவைப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்புக்கும் விசேட நிதி ஒதுக்கீட்டுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
வடமாகாணத்தில், குறிப்பாக வன்னித் தேர்தல் மாவட்டத்தில், புயலால் சேதமடைந்த வகுப்பறைகள், கூரைகள், சுற்றுச்சுவர்கள், நீர்வழங்கல் மற்றும் சுகாதார வசதிகள் பல பாடசாலைகளில் முழுமையாகச் சீரமைக்கப்படாததால், மாணவர்களின் அன்றாடக் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி. தனது 2026.06.24ஆம் திகதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். சில பாடசாலைகளில் வருடாந்த சிறுதிருத்த நிதியிலிருந்து தற்காலிகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், புயலால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாகச் சீரமைக்க அந்த நிதி போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலை, மாவட்டவாரியான சேத மதிப்பீடுகள், இதுவரை வழங்கப்பட்ட நிதி, நிலுவையிலுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீட்டின் தேவை ஆகியவற்றை ஆராய்வதற்காக, இவ்விடயத்தைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு அவர் கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இக்கோரிக்கையை முன்மொழிவு இல. 622 ஆகப் பதிவு செய்த நாடாளுமன்றச் செயலகம், அதனை அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்குக் குழுத் தலைவரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கவுள்ளதாக 2026.07.13ஆம் திகதிய கடிதத்தில் தெரிவித்தது. குறித்த முன்மொழிவு தொடர்பான அறிக்கையை ரவிகரன் எம்.பிக்கு விரைவாக அனுப்புமாறும், அதன் பிரதிகளைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குழுச் செயலாளருக்கு வழங்குமாறும் அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டது.

அமைச்சின் பதில் அறிக்கையின்படி, வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் 196.22 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 142.93 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 149 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் டித்வா புயலால் 2,141 அரச பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 958 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், 1,183 பாடசாலைகளில் பணிகள் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் 13,135.47 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,274.24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளுக்குத் தேவையான 4,795.98 மில்லியன் ரூபாய் எதிர்காலத்தில் ஒதுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் மொத்தமாகத் தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் எந்தெந்தப் பாடசாலைகளில் என்னென்ன பணிகள் நிலுவையில் உள்ளன என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. வடமாகாணத்துக்குத் தேவையான 53.29 மில்லியன் ரூபாய் எப்போது விடுவிக்கப்படும் என்பதும், ரவிகரன் எம்.பி. கோரிய விசேட நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவும் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த சந்தேகநபரை நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.…

0 0 0
இலங்கை செய்திகள்

வருமான வரித் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது கோரிக்கைகளை முன்வைத்தும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்…

111 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் அவரது உதவியாளர்கள் கைது.!

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

115 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி.!

மன்னார் நகரசபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 4 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. மன்னார் நகர சபையின் 18 ஆவது மாதாந்த கூட்டம் இன்றைய தினம்…

106 0 0