அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது ஜனாதிபதி பதவிக்கால அனுபவங்களை உள்ளடக்கிய “Promise Me, America” என்ற நினைவுக் குறிப்புகள் அடங்கிய நூல் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த நூலில், ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், எடுத்த தீர்மானங்கள், அவற்றுக்கான காரணங்கள், அமெரிக்காவின் தேசிய அடையாளம் மற்றும் உலக அரங்கில் அமெரிக்காவின் பங்கு உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நூலை எழுதிக்கொண்டிருந்த காலப்பகுதியில் தனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு அவர் அளித்து வரும் பதில் மருத்துவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களில் உடல்நிலை சிறப்பாக இருப்பதாகவும், சில நாட்களில் சிகிச்சையின் காரணமாகத் தனது செயற்பாடுகள் மந்தமடைவதாகவும் தெரிவித்துள்ள அவர், நூல் தொடர்பான கலந்துரையாடல்களில் எதிர்பார்த்த அளவுக்குப் பங்கேற்க முடியாமல் போகலாம் என்றும் கூறியுள்ளார்.
எனினும், நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் வாசகர்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை கூறிய அறிவுரையான, “வீழ்த்தப்பட்டால் மீண்டும் எழுந்து நில்” என்பதைப் பின்பற்றி தொடர்ந்து முன்னோக்கிச் செல்லப்போவதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க மக்கள் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள அவர், அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படைக் கொள்கையை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.


