ஊழலை ஒழிக்கும் அனுர அரசு வடக்கு ஆளுநர் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமா? இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி
வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் யாழ்மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் அனுர அரசு முறையான விசாரணையை நடத்துமா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது ஆட்சியில் உள்ள அனுர தலைமையிலான அரசாங்கம் நாட்டில் இடம் பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்துவோம் என ஆட்சிக்கு வந்தார்கள்.
அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ராஜபக்சககளால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் வட மாகாண ஆளுநராக இருக்கும் வேதநாயகன் அரசாங்க அதிபராக இருந்தபோது ஊழல் முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணை குழுவிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாட்டை முன் வைத்திருக்கிறது.
யார் ஊழல் செய்தாலும் அவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தற்போதைய அனுர தலைமையிலான அரசாங்கம் கூறுகிறது.
நாங்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம் வட மாகாண ஆளுநரின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நிலையில் உங்களால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியை கேட்க விரும்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


