அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ அதிகாரி உயி@ரிழப்பு
அம்பாறை புறநகர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை புறநகர் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்கச் சென்றபோது இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தனது சகோதரருடன் மீன்பிடிக்க குளத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த காட்டு யானை அவர்களைத் துரத்தியுள்ளது. இருவரும் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க ஓடியவேளை, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தவர் யானையால் தாக்கப்பட்டுள்ளார்.
இக்காட்டு யானைத் தாக்குதலில் உயிரிழந்தவர் அம்பாறையில் உள்ள கொண்டவட்டுவான் இராணுவ முகாமில் பணியாற்றி வந்த இராணுவ வீரராவார். அவர் சம்பவ தினத்திற்கு முன்னர் மாலை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த நிலையில் தனது சகோதரருடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உயிரிழந்தவர் ரவீந்திர குமார எனும் இராணுவ சார்ஜென்ட் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அம்பாறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி மற்றும் அம்பாறை பிரதேச 1 உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் உத்தரவுகளுக்கு இணங்க அம்பாறை தலைமையகத்தின் பிரதம பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், வனவிலங்குத் திணைக்களத்தின் அம்பாறை கள அலுவலகத்தைச் சேர்ந்த கீஹன் சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் வனவிலங்குத் திணைக்களத்தின் சார்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


