பண்டாரவளையில் மண்சரிவு : வீடு பகுதியளவு சேதம்!
பதுளை மாவட்டம், பண்டாரவளை லியன்கஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் ஒரு பகுதி நேற்று (05) காலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக லியன்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை சுமார் 9.30 மணியளவில் குறித்த வீட்டின் சமையலறை மற்றும் மலசலகூடம் அமைந்துள்ள பகுதிகளுக்கு இடையிலான நிலப்பகுதி திடீரென சரிந்து விழுந்துள்ளது.
குறித்த வீட்டில் தாய், தந்தை மற்றும் ஆண் பிள்ளை ஒருவர் வசித்து வருகின்றனர். எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதேச கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வீட்டில் வசிப்பவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.




