ரணிலின் கூற்று ஏற்கத்தக்கது! எவரும் திரிபுபடுத்த வேண்டாம்!!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்து மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும் எனவும், அதனை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை எனத் தவறாகத் திரிபுபடுத்தக் கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெறும் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தின்போது ஊடகங்களிடம் தெரிவித்திருந்த கருத்து குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார்.
ஊடககளிடம் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில்:-
“பாரம்பரிய அரசியல் கூட்டணிகளுக்கு மாத்திரம் அப்பாற்பட்டு, நாட்டின் இளம் தலைமுறையினரை நோக்கிக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையே ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கின்றார். மாறாக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று அவர் எங்குமே குறிப்பிடவில்லை. எனினும், சிலர் அவருடைய கருத்தைத் தவறான முறையில் திரிபுபடுத்த முற்படலாம்.
முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ள விடயம் தற்போதைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும். ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமல்லாமல், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.” – என்றார்.
அரசியல் மறுசீரமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தற்போது இலங்கையில் இளம் தலைமுறையினரே நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்தியாக உருவெடுத்துள்ளனர். எனவே, அவர்களுக்கு முன்னுரிமையளித்துச் செயற்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. மாவட்ட ரீதியில் மக்கள் சந்திப்புகள் கிராம மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆண்டில் இந்தக் கட்சி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தி மேலும் மேம்படுத்துவதற்கான விரிவான திட்டமிடல்கள் இடம்பெற்று வருகின்றன.” – என்றார்.


