உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ**லை; முக்கிய துப்பாக்கிதாரி கைது.!
களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய துப்பாக்கிதாரி கடுவலை, ரனல பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பதுளைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை (09) நாகொடை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 54 வயதுடைய உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த அவரது மனைவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம், குற்றத்துடன் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிதாரி கடுவலை பகுதியில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘டிப்பிடிகொட சக்தி’ என்பவரின் உறவினருக்குச் சொந்தமான வீட்டிலேயே இவர் பதுங்கியிருந்துள்ளார்.
‘களுத்துறை நவீன்’ எனப்படும் நபரின் உத்தரவுக்கு அமையவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கி மற்றொருவரால் துப்பாக்கிதாரியிடம் வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பின், அந்தத் துப்பாக்கி தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடை பரிமாற்றப் பகுதிக்கு அருகில் மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


