வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இரவு 11.30 மணி நிலவரப்படி, குறித்த தொகுதியானது, வட அகலாங்கு 15.5° மற்றும் கிழக்கு தீர்க்கதோடு 91.0° க்கு அருகில் மையம்கொண்டிருந்தது.
இந்த தொகுதி, ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று வங்கக்கடலின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதிகள் ஊடாக நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இந்த தொகுதியானது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 26 ஆம் திகதி காலை வேளையில் புயலாகவும், ஒக்டோபர் 27 ஆம் திகதி காலை வேனையில் மேற்கு-மத்திய வங்கக்கடல் கடல் பகுதிக்கு அருகில் தீவிர புயலாக மேலும் தீவிரமடைவதற்கான உயர் சாத்தியம் உள்ளது.
இத் தொகுதியால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாலும், இத் தொகுதியுடன் தொடர்பான காற்று வீச்சு நாட்டுக்குக் குறுக்காகப் பரவுவதால், அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் அங்கங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் , பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

