செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை நடத்த வேண்டும் – கனேடிய அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைத் தலைநகர் ஒட்டாவாவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி ஆக்கிரமிப்பு மற்றும் நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கனேடிய அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் காணிகளையும், யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் 2,117 ஏக்கர் காணிகளையும் உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தையிட்டி காணிப் பிரச்சினைக்கும் விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டிய குழுவினர், நல்லூரில் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்தும் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாகக் கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்திப்பின் நிறைவில், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் கேப்பாப்பிலவு, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் கனேடிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

