தடுப்பூசி ஏற்றாமல் ஐந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்த உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
முல்லைத்தீவு – கோம்பாவில் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில், தனது வீட்டில் ஐந்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றாமல் வளர்த்து வந்த நாய் உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நாய்கள் வீதியால் பயணிப்பவர்களை மிரட்டுவதாகப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த கோம்பாவில் பொது சுகாதாரப் பரிசோதகர், குறித்த நாய் உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, பதில் நீதிபதி நாய் உரிமையாளரைப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், அவரது வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் விலங்கு விசர் நோய் தடுப்பூசியை ஏற்றி, அதற்கான தடுப்பூசி அட்டைகளை எதிர்வரும் 04.12.2026 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நாய்களுக்கான விலங்கு விசர் நோய் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, நாய் உரிமையாளர்கள் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பொது சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு தமது நாய்களுக்குத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும்.
மேலும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கிராமம் கிராமமாகச் சென்று நாய்களுக்கு விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் நாய்களின் நலனையும் கருத்திற்கொண்டு, வீடுகளில் நாய்களை வளர்ப்போர் உரிய தடுப்பூசிகளைத் தவறாது ஏற்றுவதுடன், அவற்றைப் பொறுப்புடன் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

