தண்டனைக்குப் பிறகும் தாய்நாட்டிற்காக விளையாடுவேன்: ரொனால்டோ உருக்கம்!
தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறியது தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டென்மார்க்கிற்கு எதிராக நடைபெறவிருந்த நேஷன்ஸ் லீக் (Nations League) போட்டிக்கு முன்னதாக, கோபன்ஹேகனில் உள்ள அணியின் முகாமில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வே அணிக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படாத ரொனால்டோ, அணியில் தனக்கான பங்களிப்பு குறித்து கொடுத்த வாக்குறுதிகளைப் பயிற்சியாளர் இரண்டு முறை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதை போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக ஏ போலா (A Bola) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணையை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நோர்வே அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ரசிகர்களுக்கு முறையாக நன்றி தெரிவிக்காததற்கும், சக வீரர்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறாததற்கும் ரொனால்டோ அண்மையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விதிக்கப்படும் எந்தவொரு தண்டனையையும் அனுபவித்த பிறகு, தேசிய அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

