கறுப்பு ஜூலைக்காகத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன்! : சஜித் உருக்கம்!!
இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி, எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, ‘கறுப்பு ஜூலை இன வன்முறைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தல்’ தொடர்பான செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் வரலாற்றில் கறுப்பு ஜூலை ஒரு கறுப்புப் புள்ளியாகும். அதனால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்திடம் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒரு நாடாக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என்ற பிரிவினைகள் இன்றி அனைவரும் ‘இலங்கையர்கள்’ என்ற உணர்வுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில், 13 ஆவது திருத்தத்தைக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
காணிகளை இழந்த மக்களுக்கு உடனடியாகக் காணி உரிமையை வழங்க வேண்டும். ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் காணி வழங்கப்படாவிட்டால் சந்தை மதிப்புக்கேற்ற நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.