நாமலை சிறையில் அடைத்தாலும் ஜனாதிபதியாக்குவோம்.!
நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை திருத்திக் கொள்ள தயாராகவுள்ளார்கள். நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் செயற்படுகிறது. அரசியல் பழிவாங்கலுக்காகவே நீதிபதிகளின் பதவிக்காலம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான மறுசீரமைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் முன்னெடுக்கிறது. அதில் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் தரப்பினர் தற்போது இலக்கு வைக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள்.
நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை திருத்திக் கொள்ள தயாராகவுள்ளார்கள்.
நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தவர்கள் தற்போது எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள். 2029 ஆம் ஆண்டு நிச்சயம் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.