உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
93 பார்வைகள்

தனமல்வில பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்றை முற்றுகையிட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 05 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மொனராகலை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் புத்தல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், தெஹியத்தகண்டியவைச் சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், பிபிலையைச் சேர்ந்த 39 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் பிபிலையைச் சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோராவர்.

தனமல்வில, நிக்கவெவ தெமோதர குளத்திற்கு அருகில் கஞ்சா தோட்டம் ஒன்று இயங்கி வருவதாகத் தனமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கடந்த 11 ஆம் திகதி அப்பகுதியில் பொலிஸாரால் விசேட முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுச் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான மேலும் மூன்று கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்போது, மற்றுமொரு கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸார், அது குறித்துச் சந்தேகநபரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

10 ஆம் திகதி மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆறு அதிகாரிகள் வந்து இந்த தோட்டத்தை முற்றுகையிட்டதாகவும், தமக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகத் தம்மிடம் 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன், அங்கிருந்த ஐந்து கஞ்சா தோட்டங்களில் ஒன்றை மட்டும் தீயிட்டு அழித்துவிட்டு, ஏனைய கஞ்சாத் தொகையை அந்த அதிகாரிகளே எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நிக்கவெவ பகுதியைச் சேர்ந்த ‘களு’ எனப்படும் மற்றொரு நபரும் கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆறு அதிகாரிகள் வந்து கஞ்சா தொகையை உலர்த்துமாறு தன்னிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் உத்தரவு பெற்றனர்.

தொடர் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், தனமல்வில பொலிஸாரால் குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

112 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

111 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0