அரசியல் தேவைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்தும் அரசு.!
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகப் பொலிஸ் திணைக்களத்தை ஒரு கருவிக் கரமாகப் பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையின் ஸ்ரீ விஷ்ணு மகா தேவஸ்தானத்தில் நேற்று திங்கட்கிழமை (10) விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வீடுகளுக்குக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் அளவுக்குப் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் பொலிஸ்மா அதிபரோ அல்லது பொலிஸ் திணைக்களமோ உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் போன்ற பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்ட மாத்திரத்திலேயே மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வாக்குமூலங்களைப் பெற முற்படுகின்றனர்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என அரசாங்கம் நினைத்தால் அது தவறானதாகும்.
காலியிடங்களை நிரப்புவதும் புதிய நீதிமன்றங்களை நிறுவுவதுமே இதற்கான உண்மையான தீர்வாகும்.
இந்தச் சட்டத்திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தைப் கடுமையாகப் பாதிக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் என்பன சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும்.
அதேபோன்று, சிறைச்சாலைகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தித் தப்பியோட முடியாது.
சிறைச்சாலைகள் அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எத்தனை சிறைச்சாலைகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்? வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைச் சிறைச்சாலை உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்புரிச் சேவைகளுக்கும் எவ்வாறு செலவிட்டார் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.
அடக்குமுறை என்பது மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தத்தில் ஊறிய இயல்பாகும். 83 ஆம் ஆண்டு கலவர காலகட்டம் தொட்டே தொடரும் அவர்களின் இந்த அடக்குமுறைப் போக்கையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றது.
ஊடகவியலாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் வைத்தியர்கள் தங்களின் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் போது, அவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து அடக்க முயல்கின்றனர். ஆனால், இவ்வாறான அடக்குமுறைகளால் மக்களின் குரலையோ அல்லது எதிர்க்கட்சியின் குரலையோ ஒருபோதும் முடக்கிவிட முடியாது என்றார்.