உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்



மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-

“நமது நாடு சர்வதேச ரீதியாகச் செலுத்த வேண்டியிருந்த 25 இலட்சம் அமெரிக்க டொலர் தவணைப் பணம் அண்மையில் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளது. மிகவும் மோசடியான ஒரு நெட்வொர்க் மூலமாக நாடு இந்த பெருமளவிலான நிதியை இழந்துள்ளது.

இந்த இழப்பின் ஒட்டுமொத்த சுமையையும் நாட்டின் சாதாரண வரி செலுத்துவோரே சுமக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இது குறித்து இதுவரை முறையான தகவல்கள் எதனையும் அரசு நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை.

இந்த நிதி மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு முறையான மற்றும் வெளிப்படையான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டியது தற்போதைய அரசின் தார்மீகக் கடமையாகும்.

அரசு இத்தகைய நிதிக் குற்றங்களை மறைமுகமாக அரங்கேற்றி வருவதைப் போன்றே, நாட்டின் நிதி நிறுவனக் கட்டமைப்புக்குள் இடம்பெறும் திட்டமிட்ட முறைகேடுகள் காரணமாக அப்பாவி வைப்பாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமான சென்ட்ரல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்ட போது, சுமார் 4 ஆயிரத்து 200 வைப்பாளர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டது.

பின்னர், இரு கட்டங்களாக 5 இலட்சம் மற்றும் 6 இலட்சம் வீதம் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்தப்பட்ட போதிலும், அந்த நிறுவனத்தைக் கலைக்கும் போது வைப்பாளர்களுக்கு மிகவும் சோகமான விதியே நேர்ந்துள்ளது.

தற்போதைய சட்டப்படி, நிறுவனம் கலைக்கப்படும் போது முதலில் கலைப்பாளரின் செலவுகள், இரண்டாவதாக மத்திய வங்கிக்குச் சேர வேண்டிய பணம், மூன்றாவதாக நிறுவனத்தின் ஏனைய கடன்பொறுப்புகள் தீர்க்கப்பட்ட பின்னரே எஞ்சியிருந்தால் வைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

தற்போதாவது இந்த வைப்பாளர்களுக்கு முதன்மை முன்னுரிமை பெற்றுக் கொடுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை மத்திய வங்கி வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை எனின், அவர்களின் வைப்புத்தொகை மற்றும் வட்டி வருமானத்துக்கு விசேட நிவாரணத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதேபோன்று, தற்போது ‘நேஷன் லங்கா பைனான்ஸ்’ நிறுவனத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைப்பாளர்களும் இதேபோன்ற திகைப்பிற்குள்ளாகியுள்ளனர்.

சிங்ஹபுத்ர பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த 2022 இல் கேண்ட்ரிச் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வியப்பூட்டும் விசித்திரம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் அனைத்தினதும் பணிப்பாளர் பதவிகளை ஒரேயொரு குறிப்பிட்ட குழுவினரே வகித்துள்ளனர்.

உறுதிமொழிப் பத்திரங்கள் மூலம் கணக்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட போதிலும், ‘சிங்ஹ கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட்’ எனப்படும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முகவரியில் அத்தகைய ஒரு நிறுவனம் நடைமுறையில் இயங்கவே இல்லை.

பொதுமக்கள் வைப்புகளைச் சேகரிப்பதற்கு மத்திய வங்கி தடை விதித்திருந்த காலகட்டத்திலும், இந்த நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் புதிய வைப்புப் பணத்தைச் சேகரித்துள்ளன. தற்போது இந்த வைப்பாளர்களுக்குப் பணமோ அல்லது அதற்கான வட்டியோ கிடைத்தபாடில்லை.

இப்போது இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்ட நடவடிக்கைகள் மிகவும் ஆமை வேகத்திலேயே நகர்கின்றன. இது ஒரு திட்டமிட்ட நிதிக் குற்றமாகும்.

நாட்டின் பல்வேறு செல்வாக்குமிக்க அரசியல் மற்றும் வர்த்தகத் தரப்பினர் இதன்  பின்னணியில் ஈடுபட்டுள்ளமையால் முறையான விசாரணைகளை நடத்தி அநீதிக்குள்ளான வைப்பாளர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டியது அரசின் பொறுப்பாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0