உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் திட்டமிட்ட முறையில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது என்று அதன் ஏற்பாட்டாளரான ‘சங்கமம் குளோபல் அக்கடமி’ மற்றும் ‘சங்கமிலியா ஹாலிடேஸ்’ நிறுவனங்களின் நிறுவுநர் கே. தினேஷ்குமார் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.

தமது நிறுவனங்களின் தூய்மையான கலாச்சார முயற்சிக்கு அரசியல் உள்நோக்கத்துடன் களங்கம் விளைவிக்க முயலும் நபர்களுக்கு எதிராக, அடுத்தகட்டமாகச் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் வெளியிட்ட விளக்கங்கள் வருமாறு:-

“இந்தக் கின்னஸ் சாதனை நிகழ்விற்கான பதிவுக்கட்டணமாக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் ரூபா வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. உண்மையில், பங்கேற்ற ஒட்டுமொத்த மாணவர்களில் 4 ஆயிரத்து 100 பேரிடமிருந்து மட்டுமே தலா 4 ஆயிரத்து 500 ரூபாய் பதிவுக்கட்டணமாகப் பெறப்பட்டது.

எஞ்சிய பெருமளவிலான மாணவர்கள் வறிய பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால், நடன ஆசிரியர்களின் உத்தியோகபூர்வ பரிந்துரையின் பேரில், எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகவே இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

வசூலிக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் இலங்கையிலுள்ள ‘சங்கமிலியா’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதே தவிர, இந்திய நிறுவனத்துக்கோ அல்லது தனிநபர்களின் கணக்குகளுக்கோ அணுவளவும் அனுப்பப்படவில்லை. இதற்கான முறையான வரவு – செலவுக் கணக்குகள் எம்பால் பேணப்பட்டு வருகின்றன.

இதுவொரு அரச உத்தியோகபூர்வ நிகழ்ச்சி அல்ல, முற்றிலும் எமது தனியார் அமைப்பின் முயற்சியாகும். இதற்காக அரசிடமிருந்து நாங்கள் எவ்வித நிதி உதவியையும் கோரவில்லை. எனினும், இதற்கான அனுமதிகளைப் பெற நாம் முற்பட்ட போது, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், இது இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் நாட்டின் கலாச்சாரத்துக்கும் சர்வதேச ரீதியில் பெருமை சேர்க்கும் விடயம் என்பதை உணர்ந்து, இதற்கான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உரிய திணைக்களங்களின் அனுமதிகளைத் தாமதமின்றிப் பெற்றுத் தருவதற்கான தார்மீக ஒத்துழைப்புகளை மட்டுமே வழங்கினார். இதில் எவ்வித அத்துமீறல்களும் இல்லை.

கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழில் மாணவர்களின் தனிப்பட்ட பெயர்கள் அச்சிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் எவ்வித நியாயமும் இல்லை. கின்னஸ் உலக சாதனை விதிகளின்படி, குழுவாகச் செய்யப்படும் சாதனைகளுக்கான அசல் சான்றிதழ் ‘சங்கமிலியா ஹாலிடேஸ் இலங்கை’, ‘சங்கமம் குளோபல் அகாடமி இந்தியா’ மற்றும் ‘பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்கள்’ என்றே கின்னஸ் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பொதுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தனித்தனியாக அசல் சான்றிதழ் அல்லது மின் – சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள், கின்னஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய கட்டணங்களைச் செலுத்தி அதனை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம்.

உலக அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த இந்த உன்னத நிகழ்வைச் சிலர் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் சீர்குலைக்க முயல்வது, இந்த நாட்டிய கலையை நம்பியிருக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவதூறு பரப்புவோருக்கு எதிராக எமது சட்டத்தரணிகள் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0