தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!
நுவரெலியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஆதரவளித்த இருவர் ஆகிய 4 பேரையும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதான நால்வரும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த உத்தரவு நீதவான் புத்திகா ஹர்ஷனி தர்மதாசவால் பிறப்பிக்கப்பட்டது.
நுவரெலியாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்த இயன்முறை வைத்தியர் கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஆதரவளித்த இருவர் ஆகிய 4 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஆதரவளித்த குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை (25) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 48 மணிநேர பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மூன்று சந்தேக நபர்களும், பிரதான சந்தேக நபர் தப்பிக்க உதவிய குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரியும் என 4 பேரும் இன்றைய தினம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபரின் குழந்தையைத் தாயின் காவலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார் என நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் ஆய்வாளர் பி.எஸ்.சி. சஞ்சீவ தெரிவித்தார்.