உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

“போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்? பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற உணர்வோடும், அவர்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம் என்ற கடமையுணர்வோடும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளுநர் தனது தலைமையுரையில் மேலும் குறிப்பிட்டதாவது,
“இறுதிப் போரின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்த காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. மக்களின் தனிப்பட்ட ஆவணங்களும் போரால் தொலைந்து போய்விட்டன. போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், எமது மக்கள் தமக்கான காணி உறுதிப்பத்திரங்களுக்காக இன்னமும் அலைந்து திரிகின்றார்கள்.

இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவாகத் தீர்த்து வைப்பதற்காகவே மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன் அவர்களின் எண்ணக்கருவில் இந்த விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். இருப்பினும், இத்திட்டத்தின் முன்னேற்றம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை என்பது கவலையளிக்கின்றது.

இந்தக் காணிப் பிரச்சினைகளை நாம் விரைவாகத் தீர்க்காவிட்டால், மக்கள் தினமும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் எனது அலுவலகம் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பார்கள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும்.” – என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன், வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 198, 751 காணி தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைவதற்காக ஆளுநரின் அனுமதியுடன் ஆளணிச் சீராக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விசேட செயற்றிட்டத்துக்கான கொடுப்பனவுகளுக்கு ஆளுநர் அனுமதியளித்தமைக்காகத் தனது நன்றிகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், அதிகாரிகளின் தாமதங்களால் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் சுணக்கம் காரணமாக, மாகாணத்துக்கான பெருமளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

பின்னடைவுகளுக்கான காரணங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன், தொடர்புடைய அதிகாரிகளிடம் உரிய விளக்கங்களும் கோரப்பட்டன. தொடர்ந்து பின்னடைவைக் காண்பிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யோசனையையும் மாகாண காணி ஆணையாளர் முன்வைத்தார்.

எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டத்தை மிகத் துரிதமாக முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், பிரதேச செயலாளர்கள் ஒவ்வொரு வாரமும், மாவட்டச் செயலாளர் மாதாந்தமும் இதன் முன்னேற்றங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என உறுதியான அறிவுறுத்தலை வழங்கினார்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

73 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0