உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடந்த 1998 இல் மீட்கப்பட்ட செம்மணி மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பத்திரமாக உள்ளன.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
104 பார்வைகள்

கடந்த 1998ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தற்போதும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக உள்ளன என்றும், இலங்கை அரசு நினைத்தால் உடனடியாகக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து மீண்டும் அங்கு டி.என்.ஏ. பரிசோதனைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பரிசோதனை நடவடிக்கைகளை நோர்வே அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவலகப் பொறுப்பாளருடனான சந்திப்பில் தான் முன்வைக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 380 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே மிகப்பாரிய தளமாகச் செம்மணி மாறியுள்ளது. இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளை வெறுமனே அகழ்ந்து எடுப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. அதற்கடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த அகழ்வாராய்ச்சியால் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விடும்.

அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையைத் தனித்து மேற்கொள்வதற்கு, இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் போதுமான அளவில் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்துக்குப் பொறுப்பான உயர் அதிகாரியுடன் நான் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளேன். இந்தச் சந்திப்பின் போது செம்மணி விவகாரம் குறித்தே பிரதானமாகப் பேசவுள்ளேன்.

சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்ப நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக, சர்வதேச நிபுணத்துவத்தையும் தொழில்நுட்ப உதவியையும் இலங்கை அரசு நாட வேண்டியதன் அவசியத்தை அவரிடம் எடுத்துக்கூறவுள்ளேன்.

செம்மணி மனிதப் புதைகுழி தளம் வரலாற்று ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவோ, மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகளைக் கண்டறியவோ அதிகாரிகள் இதுவரை முறையான அக்கறை காட்டவில்லை. நீண்டகாலமாகத் தங்களின் உறவினர்களைத் தேடி, நீதிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்குப் பதிலளிக்கத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, இலங்கை அதிகாரிகள் தயாராகவுள்ளனர் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்பதையும் நோர்வே பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டுவேன்.

1998இல் செம்மணியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ளன. இலங்கை அரசு நினைத்தால் நாளைய தினம்கூட அதிகாரபூர்வக் கடிதம் மூலம் மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனையை ஆரம்பிக்க முடியும். இந்த ஒட்டுமொத்தப் பரிசோதனைச் செயல்முறையையும் நோர்வே அரசு முன்னின்று பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் வலுவாக முன்வைக்கவுள்ளேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

70 0 0
இலங்கை செய்திகள்

நாடெங்கும் 2027 பட்ஜட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

96 0 0
இலங்கை செய்திகள்

தேர்தலை முடக்கி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதா?

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், கொழும்பு…

114 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

107 0 0