உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

குடும்பம் குடும்பமாகக் கொ*ல்லப்பட்டு புதைப்பு; சர்வதேச ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 380ஆவது என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், இலங்கையிலேயே அதிக எண்ணிக்கையான என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழியாகச் செம்மணி உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னர் மன்னார் ‘சதொச’ புதைகுழியில் 376 என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டதே அதிகப்படியாக இருந்தது. செம்மணியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு இன்னும் பல பகுதிகள் எஞ்சியுள்ளன.

இங்கு வெறுமனே ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் எனப் பலரது என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இங்கு மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டு, திட்டமிட்டுப் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாக நிரூபணமாகின்றது. எனவே, இதுவொரு சாதாரண மனிதப் புதைகுழி அல்ல.

கடந்த 1998ஆம் ஆண்டு இராணுவ வீரர் ஒருவர், இந்தச் செம்மணிப் பகுதியில் 300 முதல் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, அப்போது முதற்கட்ட அகழ்வுகள் இடம்பெற்றன. அதன்போது 15 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டதில் இரண்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

அதேபோன்றே, தற்போது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளையும் அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கு அல்லது சர்வதேசத் தரம் வாய்ந்த ஆய்வகங்களுக்கு அனுப்பக் கோரியிருந்தோம். நீதிமன்றமும் அதற்கான உத்தரவை வழங்கியிருந்தது.

என்புத் தொகுதிகளைத் தோண்டி எடுப்பது என்பது ஆரம்பகட்ட வேலை மட்டுமே. ஆனால், அவை யாருடையவை என்பதை அடையாளம் காண்பதே மிக முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக, அதற்கான பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் என்புத் தொகுதிகளை மரபணு சோதனை மூலம் ஆராய்வதற்கான போதிய நிபுணத்துவம் இல்லை என்றால், நாம் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுவோம் என்று தற்போதைய நீதி அமைச்சர் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். அவர் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து, செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடவுள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் யாருடையவை என்பது கண்டறியப்பட்டு, இந்த கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகத் தாமதமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0