உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது; உயர்தரப் பரீட்சையை ஒத்திவையுங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
31 பார்வைகள்

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் தயாராகுவதற்கும் போதிய கால அவகாசம் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளதால், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை என்பது கடுமையான போட்டித் தன்மையைக் கொண்ட ஒன்றாக மாறியுள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கல்வி அமைச்சு இந்த விவகாரத்தை மிகவும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.

கடந்த 2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய 27 முதல் 31 மாதங்கள் வரை அவகாசம் இருந்த போதிலும், 2026 மாணவர்களுக்கு வெறும் 21 மாதங்களே கிடைத்துள்ளன. நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் இன்னும் பாடத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை. பாடத்திட்டங்களை மாத்திரம் அவசரமாக முடிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களுக்கு முகங்கொடுக்கவும் சுய கற்றலுக்கும் போதிய நேரம் தேவை.

அத்துடன், ‘டித்வா’ சூறாவளிப் பேரழிவு காரணமாக மாணவர்கள் தமது பாடக்குறிப்புப் புத்தகங்களை இழந்துள்ளனர். முதல் முறை பரீட்சை எழுதுபவர்கள் மட்டுமன்றி, 2ஆம் மற்றும் 3ஆம் முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் இம்முறை முடிவுகள் வெளியானதில் இருந்து பரீட்சைக்கான கால இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோருகின்றோம். இதனை நாம் அரசியல் இலாபத்திற்காகக் கூறவில்லை. பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையையே முன்வைக்கின்றோம்.

‘டித்வா’ சூறாவளியினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்பீடுகள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. நாடு தழுவிய ரீதியில் 25 சதவீதமானோருக்கே இழப்பீடு கிடைத்துள்ளதுடன், பெருமளவு பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் வெறும் 2 – 3 சதவீதமானோருக்கே உதவி கிடைத்துள்ளது. வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 6 மாதக் கொடுப்பனவு முடிவடைந்துள்ள நிலையில், அவர்களின் அடுத்தகட்ட நகர்வு கேள்விக்குறியாகியுள்ளது. இது அரசின் பலவீனமான முகாமைத்துவத்தைக் காட்டுகின்றது.

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதியுறுகின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கான வற் வரியை நீக்குவதாகக் கூறிய அரசு அதனை இன்னும் செய்யவில்லை. பொக்கிஷம் நிரம்பியுள்ளதாகக் கூறும் அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது தொடர்பாக 7 அம்சங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையைப் பேராயர் மற்றும் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தார். அந்த வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் உண்மைகளைக் கண்டறிந்திருக்கலாம் என்பதால், இப்போதும் இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு என்பதால், இது குறித்த பேச்சுகள் இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாகாண சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ள போதிலும், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தமது கட்சி தயாராகவே உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0