உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஐந்து மாதங்களில் ஏழாவது தடவையாக எரிபொருள் விலை உயர்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அரசின் தொடர்ச்சியான ஊழல்களினாலும் மோசடிகளினாலும் ஒட்டுமொத்த மக்கள் மீதும் கடுமையான பொருளாதாரச் சுமை திணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டாக்டர் ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் சர்வஜன அதிகாரம் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வஜன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கோபி லோகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களுக்குள் ஏழாவது தடவையாகவும் எரிபொருள் விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது, சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் முற்றாக அடிபணிந்துள்ளமையையே காட்டுகின்றது. கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது சும்மா வழங்கப்படவில்லை. எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது போன்ற கடுமையான நிபந்தனைகளுக்கு அரசாங்கத்தை இணங்கச் செய்தே இந்த நிதித் தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து மக்கள் மானியங்களையும் முழுமையாக ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதனால், நாட்டின் வாழ்க்கைச் செலவு மக்கள் மேலும் தாங்க முடியாத அளவிற்கு உயரும் என எச்சரிக்கின்றோம். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் போது, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதன் இலாபத்தை மக்களுக்கு வழங்கி, எரிபொருள் விலையை 22 ரூபாயினால் குறைத்துள்ளன. ஆனால் எமது நாட்டில் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது.

ஏனைய நாடுகளின் தலைவர்கள் தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளின் போது தங்களது நாட்டு மக்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கூட்டுத் தீர்வுகளைக் காண்கின்றனர். ஜப்பான் பிரதமர், சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இதற்காக எடுத்து வரும் நடைமுறைச் சாத்தியமான உத்திகளை நாம் உதாரணமாகக் கூறலாம்.

அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்கள் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு இலவச பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மாத்திரம் மக்களை ஏமாற்றி, உண்மைகளை மறைக்கும் கொள்கையையே பின்பற்றி வருகின்றது.

மகா திறைசேரியிலிருந்து 10 தடவைகளுக்கும் மேலாகக் கள்ளக் கணக்கு ஒன்றிற்கு மக்களின் பணம் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய கிழக்கு யுத்தம் மாத்திரம் காரணமல்ல; அரசாங்கத்தின் பாரிய ஊழல்களும் மோசடிகளுமே பிரதான காரணங்களாகும்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் தோராயமாக 2,200 மில்லியன் (22,000 இலட்சம்) ரூபாயாகும். இந்த ஊழலை மறைக்க, உலக சந்தை விலையை விட அதிகமாக, ஒரு பெரல் டீசலுக்கு 286 டொலர் வரை இலங்கை செலுத்தியுள்ளது.

மேலும், மகா திறைசேரி கள்ளக்கணக்கு மூலம் 880 மில்லியன் (8,800 லட்சம்) ரூபாயும், ‘அஸ்வெசும’ திட்ட முறைகேடுகளால் 248 மில்லியன் (2,480 லட்சம்) ரூபாயும், தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி மூலம் 14,000 மில்லியன் (140,000 லட்சம்) ரூபாயும், தபால் திணைக்கள மோசடி மூலம் 220 மில்லியன் (2,200 இலட்சம்) ரூபாயும் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் ஆகியவற்றிலும் பாரிய ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழல்கள் தடுக்கப்பட்டிருந்தால் மக்கள் மீது இவ்வாறான வரிச்சுமைகளும் விலைவாசி உயர்வும் திணிக்கப்பட்டிருக்காது.

மறுபுறம், உலகில் வெறும் 25 எண்ணிக்கையில் மாத்திரமே தயாரிக்கப்படும், பிரித்தானிய அரச குடும்பத்தினரும் அரபு நாட்டு ஷேக்குகளும் மாத்திரம் பயன்படுத்தும் அதிசொகுசு வாகனங்களும், ஹெலிகொப்டர்களும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மக்களின் அன்றாடத் தேவைகளை விடக் கோடீஸ்வரர்களின் சுகபோகங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது. வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அரசாங்கத்திற்கு நெருக்கமான வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டு, பெருமளவிலான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டு அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 695 மில்லியன் டொலர் தொகையானது நன்கொடை அல்ல. அது வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாகும். இந்தக் கடனை அரசாங்கம் அல்ல, நாட்டு மக்களே தங்களது சொந்தப் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே, இந்த பணம் முறையான நோக்கங்களுக்காக, மக்களின் நலனுக்காகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் கூட்டுப் பொறுப்பில் இருந்து சர்வதேச நாணய நிதியத்தால் தப்பித்துக்கொள்ள முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0