உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அநுர அரசுக்கு அரச நிர்வாக அனுபவம் கிடையாது; நாட்டை வழிநடத்த திலித் ஜயவீரவே தகுதியானவர்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்திக்கு அரச நிர்வாகம் குறித்த எந்தவொரு அனுபவமும் கிடையாது என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே என்றும், இத்தகைய சூழலில் நாட்டை முறையாக நிர்வகிக்கத் தயாராகவுள்ள ஒரே தலைவர் திலித் ஜயவீர மட்டுமே என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி அன்றைய அரசைப் பதவியிறக்கி, அன்றைய ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்தப் போராட்டத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசு, மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கியதுடன், போராட்டக் காலத்துக்கு முந்தைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைக் மிகக் குறுகிய காலத்துக்குள் குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான், மறுமலர்ச்சி என்ற கோஷத்துடன் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது.

நாட்டைச் சுபீட்சமான நாடாக மாற்றி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு இலட்சம் ரூபா வருமானம் ஈட்டிக்கொடுப்பதாகவும், மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பதாகவும், எரிபொருள் விலைகளைக் குறைத்து மக்களுக்குச் சிறந்த வாழ்வை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், இன்று மறுமலர்ச்சியின் உண்மையான விபரீத விளைவுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு தரப்பினரும் தற்காலிகமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் கூட்டணி அமைத்தே ஆட்சியைக் கைப்பற்றினர். நாட்டின் பிரதான கட்சிகளுக்கிடையில் நிலவிய அதிகார மோதலால், நாட்டின் சொத்துக்களை அழித்து, மனிதர்களைக் கொன்று, ஆட்சி இயந்திரத்தைச் சீர்குலைத்த, ஒருபோதும் அதிகாரத்துக்கு வரக்கூடாத ஒரு தரப்பினரே இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.

அரச நிர்வாகம் குறித்த எந்தவொரு அனுபவமும் இல்லாத இவர்கள், தமக்குக் கிடைத்த ஒரேயொரு பிரதேச சபையைக்கூட நிர்வகிக்கும் திறன் இல்லாமல் செயற்பட்டனர். இவர்களின் வாக்கு வங்கி எப்போதும் மூன்று சதவீதத்துக்குள்தான் இருந்தது. பிரதான கட்சிகளுக்கிடையில் நிலவிய அதிகார மோதலின் விளைவாகவே, இன்று இவர்கள் அதிகாரத்துக்கு வரக்கூடிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டதுடன், பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்தே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இன்று நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ளது. அரசாங்கம் பதவியேற்ற காலத்துடன் ஒப்பிடும்போது, எரிபொருட்களின் விலை பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக அரசு கூறினாலும், அது முற்றிலும் பொய்யான கூற்றாகும். இக்காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் 140 சதவீதத்துக்கும் மேல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரே, ஜூலை மாதம் இறுதி வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த எரிபொருள் ஏழு மாதங்களுக்கு முன்பே கொள்வனவு செய்யப்பட்டதாகும். அப்படியிருக்கையில், சர்வதேசப் போரைக் காரணம்காட்டி விலையை உயர்த்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும். தற்போதைய அரசால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது இன்று ஊர்ஜிதமாகியுள்ளதுடன், மக்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

எனவே, இன்னும் மக்களை ஏமாற்ற முற்படாமல், இப்போதே இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் நிலையை உருவாக்காமல், நாட்டை நிர்வகிக்கக்கூடிய தகுதியுடைய ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு அரசைக் கோருகின்றோம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய, அந்தத் தகுதியும் திறமையும் கொண்ட எமது தலைவர் திலித் ஜயவீர தற்போது நாட்டைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளார். நாட்டை முன்னேற்றத் தகுதியுள்ள ஒருவரிடம் அதிகாரத்தை வழங்கி, அப்பாவி மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் இந்தச் செயலை உடனடியாக நிறுத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0