உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாடு மீண்டும் வரிசை யுகத்துக்குச் செல்லும் அபாயம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ள நாட்டின் பொருளாதார அபாய எச்சரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றது. தற்போதைய அரசின் அனுபவமற்ற பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு மீண்டும் ஒருமுறை வரிசை யுகத்துக்கும், இருண்ட காலத்துக்கும் தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் எச்சரித்துள்ளார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் நிதிக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடி அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டொலர் நெருக்கடி மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவு குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் வெறும் அரசியல் விமர்சனங்கள் அல்ல. அவை இன்று நாட்டு மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் கசப்பான உண்மையாகும்.

எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் 2022 இல் உருவாக்கப்பட்ட ஆட்சியில், மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, ஓரளவுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அந்தப் பொருளாதார அடித்தளத்தை முழுமையாகச் சீர்குலைத்து வருகின்றார்கள்.

டொலரின் மதிப்பை 330 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்று வர்த்தக வங்கிகளுக்கு வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்து, செயற்கையாக டொலரைக் கட்டுப்படுத்துவது மிகவும் முட்டாள்தனமான ஒரு செயலாகும். கடந்த காலத்திலும் இவ்வாறான தன்னிச்சையான கட்டுப்பாடுகளால் தான் டொலர் சந்தையில் கிடைக்காமல் போய், அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது என்பதை தற்போதைய அரசு மறந்துவிடக் கூடாது. சந்தை விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதை விடுத்து, முறையான நிதிக் கொள்கையை அரசு பின்பற்ற வேண்டும்.

இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த கடல்வழிப் பாலம், சேது சமுத்திரம் திட்டம் மற்றும் எரிபொருள் குழாய் இணைப்பு போன்ற பாரிய மூலோபாயத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் முடக்கியுள்ளனர். இவ்வாறான திட்டங்கள் மூலம் எமது நாட்டின் கட்டுமானத் துறைக்கும், எரிபொருள் பாதுகாப்புக்கும் கிடைக்கவிருந்த பில்லியன் கணக்கான டொலர் முதலீடுகளை இன்று நாடு இழந்துள்ளது. சர்வதேச நிதியுதவியான 1 பில்லியன் டொலரை மட்டுமே நம்பியிருப்பது நாட்டை ஒருபோதும் முன்னோக்கி நகர்த்தாது.

தேர்தல் மேடைகளில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்கு வந்தவர்கள், இன்று உலகளாவிய சவால்களையும் கச்சா எண்ணெய் விலை உயர்வையும் எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றார்கள். நிதி அமைச்சும் மத்திய வங்கியும் முறையான ஒருங்கிணைப்பு இன்றிச் செயல்படுவதையே தற்போதைய நிதி நிலைமைகள் காட்டுகின்றன.

நாங்கள் நாட்டைப் பாரிய நெருக்கடியில் இருந்து மீட்டு இவர்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் இவர்களின் தொலைநோக்கற்ற கொள்கைகளால் நாடு மீண்டும் ஒருமுறை படுகுழியில் விழுந்தால், அதற்கு இந்த அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது போலிப் பிரசாரங்களை நிறுத்திவிட்டு, ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ள ஆபத்துக்களை உணர்ந்து, பொருளாதாரத்தை முறையாகக் கையாள அரசு முன்வர வேண்டும் என எச்சரிக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0