உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புயலுக்கும் அசையாத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்கு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருட காலத்தைக் கடந்து செல்வதற்காக அல்ல. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்கும் வலுவாக முகம் கொடுத்து நிலைத்து நிற்கக்கூடிய ஒரு நிலையான பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கே ஆகும்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரையிலான 18.7 கிலோமீற்றர் நீளப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து, கலகெதர பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த கால அரசுகள் சர்வதேச வர்த்தகச் சந்தையில் அதிக வட்டிக்குக் கடன்களைப் பெற்று, தங்களது ஐந்து வருட ஆட்சிக் காலத்தை ஓட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ஆனால், இலங்கையில் முதன்முறையாக எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் தொலைநோக்குடைய அரசு ஒன்று தற்போது உருவாகியுள்ளது. இன்று நாம் ஒரு கடனைப் பெறும்போது, 2035 அல்லது 2040ஆம் ஆண்டுகளில் அதனை எம்மால் முறையாகத் திருப்பிச் செலுத்த முடியுமா என்று ஆராய்ந்தே பெறுகின்றோம். நமது கடன் பெறுதல்களைத் தேசிய உற்பத்தியில் 4 வீத வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலையான கொள்கையில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

டொலரின் ஏற்ற இறக்கங்களை வைத்து அரசு வீழ்ச்சியடையும் எனச் சிலர் மேடைகளில் கூச்சலிடுகின்றார்கள். ஆனால், நாம் முறையான பொருளாதாரத் திட்டத்துடன் பயணிக்கின்றோம். எந்தவொரு புயலுக்கும், சர்வதேச அதிர்வுகளுக்கும் அசையாமல் நிற்கக் கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது சவாலாகும்.

கடந்த 2022, 2023 காலப்பகுதியில் திறைசேரிக் கணக்கானது 800 பில்லியன் ரூபா வங்கி மேலதிகப் பற்றுடன் முற்றிலும் பணமின்றி முடங்கிக் காணப்பட்டது. இதனால் வங்கிகளால் தனியார் துறைக்குக் கடன் வழங்க முடியாமல் நிதிச் சந்தை சுருங்கியது. ஆனால், எமது முறையான முகாமைத்துவத்தால் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டின் தேசிய வருமானத்தை 16.7 வீதமாக உயர்த்தி, திறைசேரிக் கணக்கை 120,000 கோடி ரூபா மேலதிக இருப்புக்குக் கொண்டுவந்துள்ளோம்.

இதன் காரணமாக, அரசு வங்கிகளில் கடன் பெறுவதைக் குறைத்து, தனியார் துறையின் தொழில்துறைகளுக்காக 2025ஆம் ஆண்டில் 2000 பில்லியன் ரூபாயைக் கடனாக வழங்கியுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 250 பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைவதற்குக் காட்டும் முக்கிய அறிகுறியாகும். அத்துடன், 2027 ஆம் ஆண்டில் மூலதனச் செலவீனமாக 2 ட்ரில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான 4 வழிகளைக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக 112.44 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், முழுமையாக உள்நாட்டு நிதி மற்றும் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை 2029 மே 28ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறைவு செய்யப்படும். இந்த நிதியை உரிய காலத்துக்குள் கண்டிப்பாகச் செலவிட்டு, பணிகளைத் தாமதமின்றி முடிக்க வேண்டும் என ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர்களான பிரசன்ன குணசேன, எரங்க குணசேகர, ஹங்சக விஜேமுனி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0