ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?
மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..
தமக்கு எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேதனம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனால் தாம் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் வாழ்வாதார ரீதியாக தாம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்டவர்கள்,
இம் மாதத்திற்கான வேதனம் நிறுத்தப்பட்டமையினால் தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக ஹட்டன் வலயக்கல்வி பணிமனையின் கடமை நிறைவேற்று கல்வி பணிப்பாளர் ஏ.சுமதியை தொடர்பு கொண்டு வினவியபோது,
சிலர் இடமாற்றம் பெற்று சென்றிருப்பார்கள் அல்லது இடமாற்றத்தினை பெற்று வந்திருப்பார்கள்.
அவர்களுடைய முழுமையான ஆவனங்கள் கிடைக்காத பட்சத்தில் இவர்களுக்கான இம் மாத சம்பளம் நிதி சுற்றறிக்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டிருக்கும்.
தவிர ஹட்டன் வலயகல்வி பணிமனையின் ஊடாக சம்பளம் நிறுத்தப்படவில்லை என குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் நயனி எட்டியாரச்சியிடம் வினவியபோது அதற்கு பதில் அளித்த மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் இது தொடர்பாக எவ்வித முறைப்பாடும் தமக்கு கிடைக்கவில்லை எனவும்
இம்மாத சம்பளம் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு கூட எமக்கு வரவில்லை
இருந்தாலும் இது தொடர்பாக ஹட்டன் வலயக்கல்வி பணிமனையின் பணிப்பாளரோடு கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் .