மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு.!
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதுடன், பொருட்களின் விலைவாசி உயர்வினால் மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லை, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய மறுநாளே, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவரது பிணையை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கபில சந்திரசேன எவ்வித சட்டவிரோத தன்மையுமின்றி முறையான பிணையாளர்களை முன்வைத்தே பிணை பெற்றுள்ளார். ஆனால், இந்த வழக்கில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இரகசியமான முறையில் செயற்பட்டுள்ளது. முன்னதாக, அதன் பணிப்பாளர் நாயகம் கபில சந்திரசேனவைக் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரின் கீழ் செயற்படும் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும்போது, ஆணையாளர்கள் ஏன் மௌனம் காக்கின்றார்கள்? இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது ஒரு சுயாதீன நிறுவனம் அல்ல, அது அரசியல் தேவைகளுக்காக இயங்கும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக ஆபத்தான முறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
2022ஆம் ஆண்டில் டொலரின் மதிப்பு அதிகரித்தற்குக் கொவிட் நெருக்கடி, சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகையின்மை போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன. அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணம் அனுப்ப வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி கோரியிருந்தமையும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
ஆனால், இன்று கொவிட் நெருக்கடி இல்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், இந்த அரசின் ஊழல், மோசடி காரணமாகவே நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. நிலக்கரி ஊழல் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவிலான டீசலை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது. இந்த நிலக்கரி மற்றும் டீசல் ஊழல்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும்.
அத்துடன், இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் இருந்த முதலீட்டாளர்களையும் விரட்டியடித்தது. கடந்த ஒரு வருடமும் 8 மாத கால ஆட்சிக்குள் நாட்டுக்கு ஒரு டொலரேனும் கொண்டு வரக்கூடிய ஒரு முதலீட்டாளரைக் கூட ஈர்க்கத் தவறியுள்ளது.
நாடு இத்தகைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியும் பிரதமரும் இதில் தலையிட்டு தீர்வு காணாமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், பிரதமர் பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அது ஒரு பொழுதுபோக்கு பயணமா அல்லது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏதேனும் முதலீடுகளைக் கொண்டுவரும் பயணமா? மறுபுறம், நாடு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி அருகம்பே பகுதிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஜனாதிபதி பொருளாதார நிபுணர்களையும் பேராசிரியர்களையும் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், விவசாயிகளுக்கு உரம் இன்றி, அத்தியாவசிய பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், ஜனாதிபதி சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அழைத்து, அரசின் திறமையின்மையை மறைத்து எவ்வாறு பொய்களைப் பரப்புவது என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றார்.
எனவே, இந்த ஜனாதிபதி மற்றும் அரசின் அப்பட்டமான திறமையின்மை மற்றும் முறையான தொலைநோக்குப் பார்வையற்ற தன்மையின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டுள்ளது.” – என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.