விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் கடுவல நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.
பத்தரமுல்லையில் தேசிய படையினர் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக தலங்கம போலீஸார் விமல் வீரவன்சவிற்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர் .
எனினும், நேற்று அவர் சமூகமளிக்கத் தவறியதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு மீளவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, இன்று காலை தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்தமையைத் தொடர்ந்தே அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி, ரணவிரு நினைவுத் தூபி வளாகத்தில் ‘போர் வெற்றி நாள்’ நினைவுச் சின்னக் கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ ஒத்திகைகள் போலீஸாரால் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர், உரிய அனுமதியின்றி அந்த நினைவுத் தூபி வளாகத்துக்குள் பலவந்தமாக நுழைவதற்கு முற்பட்டனர்.
அப்போது, அங்கிருந்த போலீஸாருக்கும் அக்குழுவினருக்கும் இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது அரச அதிகாரிகளின் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தலங்கம போலீஸாரால் கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரைத் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.