உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன. பல வருடங்களாக தங்களது சொந்தச் செலவில் இலட்சக்கணக்கான ரூபாவை செலவழித்து கட்டிய குடியிருப்புகள் மீது தோட்ட நிர்வாகங்கள் காவல்துறையின் துணையுடன் அத்துமீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல இடங்களில் தொழிலாளர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதுடன், குடியிருப்புகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது அத்தியாவசிய உடைமைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் உடைகள் கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதேபோன்று சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் காவத்தை பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மீது தோட்ட நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.

அச் சம்பவத்தையடுத்து மலையக தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.
ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களோ அல்லது தாக்குதல்களுக்கு காரணமான தரப்புகளுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளோ இதுவரை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

இதுவே ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய அநீதி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான முக்கிய காரணமாகக் காணப்படுகிறது.

அதேவேளை, அண்மையில் நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மீது தோட்ட நிர்வாகம் காவல்துறையின் உதவியுடன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் அவசர கவனயீர்ப்பு பிரேரணையை முன்வைத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கும் தோட்ட நிர்வாகத்தினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், மலையக மக்களின் குடியிருப்புகள் மீது வெளிநபர்கள் அல்லது அதிகாரத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைத் தடுக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த வாரம், பண்டாரவளை வெலிமடை பகுதியில் உள்ள டயாரபா தோட்டத்தில் பணியிடத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து, தோட்டத் தொழிலாளி ஒருவர் தோட்ட நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டுள்ள மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானவர் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வீடு, தொழில், காணி உரிமை, சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினரால் முறையான விசாரணைகளும் நீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவலைக்கிடமான விடயமாகும்.

இருநூறு ஆண்டுகளாக பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் இன்னும் நிரந்தரமான தீர்வுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். எனவே, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் தீர்வுகளை வலியுறுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0