சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போது சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 லீற்றர் (80 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 101 லீற்றர் 250 மில்லிலீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பெபிலியவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 108 லீற்றர் 750 மில்லிலீற்றர் (145 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ராகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.