நல்லிணக்கத்துக்கான பாதை மிகவும் நீண்டது.!
“இலங்கையில் இனவாதத்தை முறியடித்து நல்லிணக்கத்தை முழுவதுமாக ஏற்படுத்துவதே எங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரல். அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதை மிக நீண்டது. ஆனால் நாங்கள் அதை முன்னெடுப்பதில் சளைக்கவே மாட்டோம். அதை ஈட்டியே தீருவோம்.”
இவ்வாறு நேற்றுக் கொழும்பில் அகில இலங்கைக் கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவின் இறுதி நாள் நிகழ்வில் தமக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து உரையாற்றிய சமயம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கம்பன் புகழ் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய சமயமே மேற்கண்டவாறு ஜனாதிபதி சூளுரைத்தார்.
அவரது உரையில் முக்கிய சாரம் வருமாறு,
“இந்த நாட்டில் எல்லோரும் சம உரிமையுள்ள பிரஜைகளாக ஏற்றத் தாழ்வு அற்றவர்களாக இந்த நாட்டின் மக்களாக தங்களை உரிமையுடன் கருதி வாழக்கூடிய ஒரு சமாதான நல்லிணக்க சூழ்நிலையை நாங்கள் எட்ட வேண்டும். அதுதான் எங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல். அதற்காக நாங்கள் சளையாமல் உழைப்போம். பாடுபடுவோம். அது நீண்ட தூரப் பயணம்.
இனங்களுக்கிடையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் பரஸ்பர சந்தேகம் இருக்கின்றது. அதைக் களைய வேண்டும். இந்தப் பயணத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதிலிருந்து நாங்கள் விலகவே மாட்டோம். இன நல்லிணக்கத்தை நாங்கள் நிச்சயம் கட்டியெழுப்பியே தீருவோம்.
தமிழர்களுடைய தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தடவை என்னிடம் ஒரு விடயத்தை மிக ஆணித்தரமாகக் கூறினார்.
‘அநுரா! இலங்கை தேசத்தினுடைய பிரஜையாக இருப்பதையிட்டு நான் பெருமை கொள்வேன், எப்போது என்றால் இந்த நாட்டில் மற்ற எந்தப் பிரஜைக்கும் குறைவானவன் அல்லன் நான் என்ற நிலைப்பாடு எனக்கும் எனது மக்களுக்கும் உறுதிப்படுத்தப்படும் போது…!’ என்றார் சம்பந்தன். அது மிகவும் சரியான கருத்து. அதை நாங்கள் நிச்சயம் ஏற்படுத்துவோம்.
அந்தந்தப் பிரதேச மக்கள் தங்களுடைய நிர்வாக விடயங்களை தாங்களே கவனிக்கக் கூடிய ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும். அதையும் நாம் செய்வோம்.” – என்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.