கிளிநொச்சியில் திடீர் வாகன சோதனை – தரமற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை.!
கிளிநொச்சி பகுதியில் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகனங்களை இலக்காகக் கொண்டு திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறிப்பாக பேருந்துகள் பயணிகள் சேவைக்கு பாதுகாப்பான நிலையில் உள்ளனவா என்பதைக் கவனமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தரமற்ற நிலையில் இயக்கப்பட்ட சில வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.பரந்தன் – முருகண்டி பாதையில் இயங்கும் பேருந்துகளுக்கும் இந்த சோதனையில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் கண்டறியப்பட்ட குறைகளை 14 நாட்களுக்குள் சரிசெய்து மீண்டும் ஆய்வுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், விபத்துகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய கூடுதல் உதிரி பாகங்களை அகற்றுமாறு சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.