புதுவருட கொண்டாட்டத்திற்கு யாழ். வந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!
புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய இளைஞன் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொல்புரம், சித்தம்பி கோவிலடியை சேர்ந்த 27 வயதுடைய கோணேஸ்வரன் மயூரன் என்பவரே உயிரிழந்துள்ளதுடன், 26 வயதுடைய ரஜீவன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முரண்பாடு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் கொழும்பில் வேலை செய்துவந்த நிலையில் வருட கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது மீண்டும் முறுகல் ஆரம்பமாகியுள்ளது. இதையடுத்து இரண்டு தரப்பிலிருந்தும் இருவர், இருவர் என நால்வருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த நபர் கத்தியால் குத்தியவேளை மற்றையவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் நக்கிள்ஸ் மூலம் நெஞ்சில் தாக்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.