சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 வாகனங்கள் மீட்பு – மூவர் கைது.!
சட்டவிரோதமான பாகங்களை இணைத்து தயாரிக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், விசேட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு காவல்துறை மற்றும் முப்படை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான கடவத்தை, மீகஹவத்தமொனராகலை ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும், விசாரணைகளின் போது 40-க்கும் அதிகமான சட்டவிரோத வாகனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதால், அவற்றை மீட்பதற்கான விசேட சோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, தங்களது வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் 0112947780 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொலை, கொள்ளை, கப்பம் கோருதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.கைது செய்யப்பட்ட மூவரும்தொடர்புடைய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.