மருத்துவர்களின் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு: கிண்ணியா வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு.!
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (4) முன்னெடுத்த 24 மணி நேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினால் கிண்ணியா தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று காலை முதல் ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால், வெளிநோயாளர் பிரிவு முழுமையாக முடங்கிய நிலையில் காணப்பட்டதுடன், வைத்தியர்கள் பணியில் இல்லாத காரணத்தால் தூர இடங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
எனினும், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சத்திர சிகிச்சை சேவைகள் மாத்திரம் வழக்கம்போல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரத்தில் மூன்றாவது தடவையாகவும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.இதன் விளைவாக, பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.