25,000 மெட்ரிக் தொன் உரத்துடன் நாளை இலங்கை வரும் கப்பல்!
நாட்டில் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 25,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (05) நாட்டை வந்தடையும் என கமத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.உலகளாவிய சூழ்நிலையால் உருவாகியுள்ள உரச் சவால்களை அரசாங்கம் வெற்றிகரமாக சமாளிக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பெரும்போகத்தின் ஆரம்பத்தில் விவசாயிகளிடையே உரம் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், நாட்டில் தேவையை விட அதிகமாக பொட்டாஷ் முரியேட் மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யூரியா உரத்தில் சிறிய சிக்கல் இருக்கக்கூடும் என்றாலும், நெல் சாகுபடிக்குத் தேவையான அளவை விட அதிகமான கையிருப்பு தற்போது இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், உப பயிர்கள் மற்றும் கூடுதல் பயிர்ச்செய்கைகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு, மேலதிக உரக் கப்பல்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.